Updated: 14-11-2021 04:43 pm
காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் - பிரியங்கா காந்தி அதிரடி.
இந்தியாவில் அடுத்த ஆண்டு கிட்டத்தட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மிக முக்கிய மாநிலமாக கருதப்படும் உத்திரபிரதேசம் ஆனது அடுத்து இந்தியாவை யார் ஆள முடியும் என்பதை தீர்மானிக்கக் கூடிய இடத்தில் உள்ளது.இந்த நிலையில் பாஜக தரப்பினர் தொடர்ந்து பேரணிகளையும், காங்கிரஸ் தரப்பில் பிரியங்கா காந்தி நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வருகிறார்.சமாஜ்வாதி கட்சி சார்பில் அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் மற்றும் பிஜேபி யை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.இதில் கடந்த வாரமே பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ,"உத்தரப்பிரதேசத்தின் அனைத்து தொகுதிகளிலும் தனது கட்சி தனித்து போட்டியிடும்",என்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் பிரியங்கா காந்தி இன்று ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம் புலந்த்சாகரில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இடையே பேசிய பிரியங்கா காந்தி ," வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என்றும், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சியுடன் எந்த சூழ்நிலையிலும் கூட்டணி இல்லை என்றும்", அதிரடியாக அறிவித்து விட்டார். இது அம்மாநில காங்கிரஸாருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இத்தனை நாள் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு சட்டசபையில் நுழைய ஒரு வாய்ப்பாக சீட் வழங்க கூடும் என்று கருதுகிறார்கள்.
ஆனால் மற்ற மாநில அரசியல் விமர்சகர்கள் காங்கிரஸ் தலைமையின் இந்த முடிவு மீண்டும் பாஜகவிற்கு ஆட்சி அதிகாரத்தில் அமைய ஒரு வாய்ப்பு கொடுத்து விடும் என்றும், உத்தரபிரதேச அரசியலில் எதிர்க்கட்சிகள் ஒருமித்த கருத்து ஏற்படாதது , பாஜகவின் எதேச்சதிகாரத்திற்கு வழிவகுத்து விடுகிறது என்றும் , கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க முடியாமல் போயிற்று என்றும், இந்த முறையும் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அகிலேஷ் யாதவ் மாயாவதியையும் ஒருங்கிணைத்து செல்லவில்லை என்றால், மீண்டும் உத்தர பிரதேசத்திலும் இந்திய அளவிலும் பாஜக மிக வலிமையான கட்சியாக நிலைநிறுத்தி தொடர்ந்து ஆட்சி அமைக்க வழிவகுக்கும் என்பது விமர்சனங்களை வைத்து வருகின்றனர்